கூடலூரில்: காட்டெருமை தாக்கி காவலாளி படுகாயம்


கூடலூரில்: காட்டெருமை தாக்கி காவலாளி படுகாயம்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:15 PM GMT (Updated: 22 Oct 2018 8:27 PM GMT)

கூடலூரில் காட்டெருமை தாக்கி காவலாளி படுகாயம் அடைந்தார்.

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. இதில் காட்டுயானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சிறுத்தைப்புலிகள் இரவு நேரத்தில் கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்கின்றன. இதுபோன்ற வனவிலங்குகள் தொல்லையால் கூடலூர் பகுதி மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கூடலூர் ஏழுமுறம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(வயது 54). இவர் மேல்கூடலூர் சில்வர்கிளவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு எஸ்டேட் பகுதியில் முனுசாமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு காட்டெருமை திடீரென அவரை நோக்கி ஓடி வந்தது. தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் முனுசாமியை முட்டி தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோட்ட தொழிலாளர்கள், காட்டெருமை தாக்கி படுகாயம் அடைந்த முனுசாமியை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன், வன காப்பாளர்கள் பிரதீப் குமார், பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மீண்டும் காட்டெருமை வராமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story