அடுத்த மழைக்காலம் வரை தண்ணீர் தேவையை சமாளிக்க வாரம் ஒருநாள் குடிநீர் வெட்டு தானே, கல்யாண் மாநகராட்சிகள் அறிவிப்பு


அடுத்த மழைக்காலம் வரை தண்ணீர் தேவையை சமாளிக்க வாரம் ஒருநாள் குடிநீர் வெட்டு தானே, கல்யாண் மாநகராட்சிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:15 PM GMT (Updated: 22 Oct 2018 8:33 PM GMT)

அடுத்த மழைக்காலம் வரையிலும் தண்ணீர் தேவையை சமாளிக்க வாரத்தில் ஒருநாள் குடிநீர் வெட்டு அமல்படுத்தப்படும் என தானே மற்றும் கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிகள் தெரிவித்து உள்ளன.

மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழை காலத்தின் போது, ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பரவலாக நிரம்பின. இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை.

இதன் காரணமாக மும்பை, தானே உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அடுத்த ஆண்டு மழைக்காலம் வரையிலும் சீராக குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தானே நகரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களும், கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி பகுதியில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். தானேக்கு நாள் ஒன்றுக்கு 840 மில்லியன் லிட்டர் தண்ணீரும், கல்யாண்-டோம்பிவிலிக்கு 400 மில்லியன் லிட்டர் தண்ணீரும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்விரு மாநகராட்சிகளும் அணைகளில் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு வரையிலும் தண்ணீர் தேவையை சமாளிக்க வாரத்தில் ஒரு நாள் குடிநீர் வெட்டு அமல்படுத்தப்படும் என அறிவித்து உள்ளன.

இதன்படி தானே நகரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி செய்தி தொடர்பு அதிகாரி சந்திப் மால்வி கூறினார்.

Next Story