கப்பலில் ஆபத்தான ‘செல்பி’ விவகாரம்: முதல்-மந்திரி பட்னாவிஸ் மனைவி அம்ருதா மன்னிப்பு கேட்டார்


கப்பலில் ஆபத்தான ‘செல்பி’ விவகாரம்: முதல்-மந்திரி பட்னாவிஸ் மனைவி அம்ருதா மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 22 Oct 2018 11:30 PM GMT (Updated: 22 Oct 2018 8:38 PM GMT)

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா கப்பலில் ஆபத்தான ‘செல்பி’ எடுத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்.

மும்பை,

உள்நாட்டு கடல்வழி பயணங்களுக்காக கட்டப்பட்ட ‘ஆங்ரியா’ சொகுசு கப்பல் மும்ைப- கோவா இடையே இயக்கப்படுகிறது. கடந்த 20-ந் தேதி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இந்த பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்.

இதில் முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது அவர், கப்பலின் ஒரு முனையில் அமர்ந்து ஆபத்தான முறையில் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டார். பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைப்பார்த்த பலரும் கப்பலில் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டதாக அம்ருதாவை கண்டித்தனர்.

இதைத்தொடர்ந்து அம்ருதா மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘நான் செல்பி எடுத்த பகுதி ஆபத்து இல்லாத இடம்தான். ஏனெனில் அதற்கு கீழே மேலும் 2 படிகள் இருந்தன. எனினும் இதில் நான் தவறு செய்திருப்பதாக யாராவது நினைத்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Next Story