195 கிராமங்களில் வறட்சி டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் தீவிரம்


195 கிராமங்களில் வறட்சி டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் தீவிரம்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:00 PM GMT (Updated: 22 Oct 2018 9:00 PM GMT)

வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள 195 கிராமங்களுக்கு 239 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மராட்டியத்தில் அவுரங்காபாத், ஜல்னா உள்பட சில மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவை விட குறைந்த அளவே பொழிந்து இருந்தது.

தற்போது தான் மழைக்காலம் முடிந்த நிலையில் ஏரிகளும், குளங்களும் நீரின்றி வறண்டு காட்சி அளிக்கின்றன. இதனால் மக்கள் குடிநீருக்கு கூட வழியின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெண்கள் கால்கடுக்க பல கிலோமீட்டர் நடந்து சென்று நீரை சேகரித்துவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


நிலைமையை சீர்செய்வதற்காக மராட்டிய அரசு டேங்கர் லாரிகள் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகிறது.

வறட்சியின் கோரம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாளுக்கு நாள் குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் வரை வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த 195 கிராமங்களுக்கு 211 ேடங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 239-ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கூடுதல் டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யவேண்டிய அவசியம் உண்டாகும் என தெரிகிறது.

அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் வறட்சி பாதித்த 171 கிராமங்களுக்கு மட்டும் 190 டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

மேலும் ஜல்னா, நாந்தெட், பீட் மாவட்டங்களுக்கும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

Next Story