வாலிபரை தாக்கி செல்போன் பறித்துவிட்டு தப்பிஓடிய 2 கொள்ளையர்கள்


வாலிபரை தாக்கி செல்போன் பறித்துவிட்டு தப்பிஓடிய 2 கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 8:43 PM GMT)

வாலிபரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துவிட்டு தப்பிஓடிய கொள்ளையர்கள் 2 பேர் சட்டையில் இருந்த ரத்த கறையால் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

மும்பை,

மும்பை தகிசர், அம்பாவாடி சுதிர் பட்கே பாலத்தில் சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, போலீசாரின் சிக்னலை மீறி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் அந்த ஆட்டோவை துரத்தி பிடித்தனர்.

அப்போது ஆட்டோ டிரைவர், உள்ளே இருந்த பயணிகள் நிற்க கூடாது என சொல்லியதால் நிறுத்தாமல் வந்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த பயணிகள் அஷ்ரத் அன்சாரி(வயது20), நாவித் (18) ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது 2 பேரின் சட்டையிலும் ரத்த கறை இருந்தது.

இதுகுறித்து போலீசார் கேட்டபோது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியபோது அஷ்ரத் அன்சாரியிடம் இருந்து கத்தி, செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அஷ்ரத் அன்சாரி, நாவித் ஆகியோர் ஜூகுவில் உள்ள குல்மோகர் ரோட்டில் வைத்து அந்தேரியை சேர்ந்த ராகேஷ்குமார்(33) என்பவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து உள்ளனர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் தப்பி வந்த போது போலீசாரிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 2 கொள்ளையர்களும் ஜூகு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story