தீபாவளி கூட்டத்தில் திருட்டு நடப்பதை தடுக்க 3 இடங்களில் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு - பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுரை
தீபாவளி கூட்டத்தில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்க கோவை மாநகர பகுதியில் 3 இடங்களில் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது. அத்துடன் பொதுமக்கள் கவனமாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
கோவை,
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் புது துணிகள், நகைகள் மற்றும் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் இப்போதே குவியத்தொடங்கி விட்டனர்.இதனால் கடைகள் நிறைந்த கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100அடி ரோடு, ஒப்பணக்காரவீதி, டவுன்ஹால், பெரியகடை வீதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கூட்டம் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் நகை மற்றும் பணம் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும், மாறுவேடங்களில் சென்று கண்காணிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதற்கான ஆலோசனை கூட்டம் இன்றோ அல்லது நாளையோ நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
தீபாவளி கூட்டத்தில் திருட்டு உள்பட அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்காரவீதி, டவுன்ஹால் ஆகிய 3 இடங்களில் 30 அடி உயரத்துக்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வரு கிறது. இந்த கோபுரங்களில் போலீசார் நின்றவாறு தொலைநோக்கி கருவி மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் இந்த பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. அதில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தற்போதே தங்கள் பணிகளை தொடங்கி விட்டனர். அவர்கள் கண்காணிப்பு அறையில் இருந்தபடி, கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகப்படும் நபர்கள் குறித்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடம் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.
இதுதவிர பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளிடம் திருட்டு நடைபெறுவதை தடுக்க ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களில் மாறுவேடத்தில் சென்று காண்காணித்து வருகிறார்கள். அதுபோன்று இன்னும் கூடுதலாகவும் தனிப்படை அமைக் கப்பட உள்ளது. அவர்கள் மாறுவேடங்களில் சென்று பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ்நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது தாங்கள் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். மர்ம ஆசாமிகள், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி திருடக்கூடும் என்பதால், சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் கொடுக்கும் பொருட்களை வாங்கவோ அல்லது அவர்களுடன் பேசவோ வேண்டாம். அவர்கள் குறித்த தகவலை அருகில் நிற்கும் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.கூடுதல் நகை அணிந்துவருவது, அதிக அளவில் பணம் எடுத்து வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story