திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 3:05 AM IST (Updated: 23 Oct 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முருகபவனம், 


திண்டுக்கல் மாவட்டத்தில், காலையில் வெயில், மாலையில் மழை, இரவில் குளிர் என தட்பவெப்பநிலை மாறி, மாறி நிலவுகிறது. இதுபோன்று நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக காற்றில் பரவும் வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஏதுவாக இருக்கிறது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இத்தகைய வைரஸ் கிருமி தொற்றால் பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, வேடசந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஒருவித மர்ம காய்ச்சல் தாக்குதலுக்கு பலர் ஆளாகி உள்ளனர். அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் 271 பேர் உள்நோயாளிகளாகவும், 2 ஆயிரத்து 693 பேர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல் கடந்த மாதம் 297 பேர் உள்நோயாளிகளாகவும், 2 ஆயிரத்து 733 பேர் வெளிநோயாளிகளாகவும், இந்த மாதம் இதுவரை 170 பேர் உள்நோயாளிகளாகவும், 1,844 பேர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவமனை புள்ளி விவரம் கூறுகிறது.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீரை நன்கு சூடாக்கி ஆறவைத்து குடிக்க வேண்டும். காய்ச்சலின் அறிகுறி தெரிந்தால் தாமதிக்காமல் டாக்டரிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

Next Story