சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு: கல்லால் தாக்கி மகன் கொலை -தந்தை கைது


சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு: கல்லால் தாக்கி மகன் கொலை -தந்தை கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 3:12 AM IST (Updated: 23 Oct 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை கல்லால் தாக்கி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனூர், 

சின்னமனூர் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் போஸ் (வயது 55). விவசாயி. இவருடைய மகன் ஈஸ்வரன் (31). இவர் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். கடந்த சில தினங்களாக சொத்தை பிரித்து தரும்படி ஈஸ்வரன் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தார். அங்கு போசிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு ஈஸ்வரன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த போஸ் மகன் என்று பாராமல் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து ஈஸ்வரனின் தலையில் தாக்கினார். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த சின்னமனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட ஈஸ்வரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போசை கைது செய்தனர். 

Next Story