பாசனத்துக்காக வரதமாநதி அணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மலர் தூவி வரவேற்பு


பாசனத்துக்காக வரதமாநதி அணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மலர் தூவி வரவேற்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 9:51 PM GMT)

பாசனத்துக்காக பழனி வரதமாநதி அணையில் இருந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தண்ணீரை திறந்து வைத்து மலர்தூவி வரவேற்றார்.

பழனி, 

பழனி-கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 66 அடி ஆகும். தொடர் மழை காரணமாக இந்த அணை நிரம்பியது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று வரதமாநதி அணையில் இருந்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது, கலெக்டர் டி.ஜி.வினய், பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ், உதயகுமார் எம்.பி., முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவினர்.

இதையடுத்து வனத்துறை அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-

வரதமாநதி அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று (நேற்று) முதல் வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவற்றை பொறுத்து 130 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி, எரமநாயக்கன்பட்டி, பழனி, கோதைமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்து 623 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோல், அணையை நம்பி உள்ள 18 குளங்களை நிரப்பும் வகையில் நீர்வரத்தை பொறுத்து 150 முதல் 200 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்படும்.

வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீலமலைக்கோட்டை பகுதியில் சுமார் 400 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகால கனவுத்திட்டமான பச்சையாறு அணைத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பழனி நகர அ.தி.மு.க. செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி , முன்னாள் எம்.எல்.ஏ க்கள் சுப்புரத்தினம், ஏ.டி.செல்லச்சாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story