குறைதீர்க்கும் கூட்டம்: அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் கூட்டம்: அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 22 Oct 2018 9:59 PM GMT (Updated: 22 Oct 2018 9:59 PM GMT)

வடகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பகுதிகளில் பழங்குடியினர் உள்பட சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கடந்த ஒரு வருடமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு ஆழ்துளை கிணற்றில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. ஆனால் அதில் மோட்டார் இல்லாததால் குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள தோட்டங் களில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம்.

குடியிருப்பு பகுதி அருகே அதிக அளவு தண்ணீர் இருக்கும் இடத்தை நாங்களே கண்டுபிடித்து, அதில் ஆழ்துளை கிணறு அமைக்குமாறு அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நூறு நாட்கள் வேலை திட்டத்தில் பணி கொடுத்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது.

இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் தார்சாலை அமைத்த நிலையில், சில கிலோமீட்டர் தூரம் மட்டும் சாலை அமைக்காமல் உள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

திண்டுக்கல் ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அந்த கட்சியினர் அளித்த மனுவில், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி அருகே ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் பாலத்தை திறக்கவில்லை. கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். பாலம் இன்னும் திறக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பாலத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குஜிலியம்பாறையை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், சின்னக்குளம் அருகே தனியாருக்கு சொந்தமான ஆலை ஒன்று உள்ளது. அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குளத்தில் உள்ள தண்ணீர் மாசுபடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், சத்திரப்பட்டி, லெக்கையன்கோட்டை, இடையக்கோட்டை பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் அருகே அரசு அனுமதியின்றி மதுபான பார் நடத்தப்படுகிறது.

மேலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல், உதவித்தொகை, பட்டா, அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்டம் முழுவதும் இருந்து பலர் மனு அளித்தனர்.

இந்த கூட்டத்தில், மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story