தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு


தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 23 Oct 2018 3:30 AM IST (Updated: 23 Oct 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சியில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தேனி,


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 305 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், இக்கூட்டத்தின் போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் போடி பகுதியை சேர்ந்த 11 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வீடுகளுக்கான ஒதுக்கீடு உத்தரவை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமையில் ஊழியர்கள் பலர் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘போடி நகராட்சியில் பணியாற்றக்கூடிய தினக்கூலி பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.213 கூலி என கலெக்டரால் நிர்ணயம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5 உயர்வாகும். விலைவாசி உயர்வு காரணமாக மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, தினக்கூலியை ரூ.275 என நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் பழமுதிர்ச்சோலை தலைமையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தீபாவளி ஊக்கத்தொகையை (போனஸ்) உயர்த்தி வழங்க வேண்டுவது தொடர்பான எங்களின் கோரிக்கையை நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் எந்தவித பயனும் இல்லை. தீபாவளி போனஸ் உயர்த்தி வழங்கவில்லை என்றால் மாநில அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, போனஸ் உயர்த்தி வழங்கப்படாவிட்டால் கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி இரவு 8 மணியில் இருந்து 6-ந்தேதி இரவு 8 மணி வரை மாநில அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். அப்படியும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் 6-ந்தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறியிருந்தனர்.

இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி ராஜவாய்க்கால் இருபுறமும் ஏராளமான அப்பாவி மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள். இந்த வாய்க்காலை நம்பி விவசாயம் செய்து வந்த நிலங்கள் பெரும்பாலும் வீட்டுமனைகளாக மாறி உள்ளன. வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்ததால் தூர்ந்து போய்விட்டது. எனவே, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாய்க்காலை தூர்வார வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

காமாட்சிபுரம் அருகில் உள்ள எஸ்.அழகாபுரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் தெருப் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மனு அளித்த போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

செங்கதிர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘போடி அருகே குரங்கணி பகுதிக்கு செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வில்போன் எனப்படும் அலைபேசி இணைப்பு அங்கு சில வீடுகளில் இருந்தது. அதுவும் தற்போது பயன்பாட்டில் இல்லை. இந்த பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அப்பகுதிக்கு செல்போன் கோபுரம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

குன்னூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘குன்னூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. தற்போது நேரடியாக ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அரசால் அமைக்கப்பட்ட கழிப்பிடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மேலும், இங்கு பயணிகள் நிழற்குடை வசதியும் இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Next Story