மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிலைகள் மாயமா? போலீசார் திடீர் ஆய்வு


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிலைகள் மாயமா? போலீசார் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2018 5:00 AM IST (Updated: 23 Oct 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிலைகள் மாயமாகி உள்ளதா என்பது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை, 


தமிழக கோவில்களில் உள்ள கற்சிலைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் இருந்து 4 ஐம்பொன் சிலைகள் சமீபத்தில் கொள்ளை போனது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர். அப்போது அந்த சிலைகள் உசிலம்பட்டி அருகே முட்புதரில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை காணவில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தமிழக முதல்-அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கலெக்டர் மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில், “மீனாட்சி அம்மன் கோவில் திருவாட்சி மண்டபத்தில் இருந்த சுடர் விளக்கு, பளிங்கு கற்களால் செய்யப்பட்ட மேத்தா தட்சிணாமூர்த்தி சிலை மற்றும் தீ விபத்தின் போது பாதிப்படைந்த தூண்கள் உள்பட ஆயிரம் சிலைகளை காணவில்லை” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில் போலீசார் நேற்று காலை திடீரென மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு வந்த புகார் குறித்து கோவில் இணை கமிஷனர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர். திருவாட்சி மண்டபத்திற்கு சென்று சுடர் விளக்கு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த விளக்கு அங்கு இருப்பதை கோவில் அதிகாரி காண்பித்தார். மேலும் கோவிலில் உள்ள மொத்த சிலைகள் எத்தனை, தற்போது அந்த சிலைகள் எங்கெங்கு உள்ளன, சேதம் அடைந்த சிலைகள் எத்தனை, அது எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடந்தது.

கோவிலில் உள்ள மொத்த சிலைகள் குறித்த ஆவணங்களை போலீசாரிடம் கோவில் அதிகாரி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவிலின் ஒவ்வொரு பகுதியாக சென்று சிலைகள் குறித்து கணக்கெடுத்தனர். மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

அப்போது சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் இருந்த பளிங்கு கற்களால் செய்யப்பட்ட மேத்தா தட்சிணாமூர்த்தி சிலையை காணவில்லை என்று புகாரில் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அந்த சிலையும் ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பார்வையிட்டு உறுதி செய்தனர்.

இதுதவிர கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல் தூண்கள் பாதுகாப்பாக தெப்பக்குளம், அனுப்பானடி பகுதிகளில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வைத்திருப்பதையும் உறுதி செய்தனர். நீண்ட நேரம் ஆய்வுக்கு பிறகு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த திடீர் ஆய்வால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story