பெண் விவகாரத்தில் குற்றச்சாட்டு: அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் சேலத்தில் முத்தரசன் பேட்டி
பெண் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என சேலத்தில் முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி பொற்கால ஆட்சி என்று முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்த ஆட்சி பொற்கால ஆட்சி அல்ல, பொல்லாத ஆட்சி. மத்தியில் உள்ள மோடி ஆட்சி மோசடியான ஆட்சி. அ.தி.மு.க.வினர் தேர்தலை கண்டு பயப்படுகிறார்கள். அவர்கள் தேர்தலை சந்தித்தால் நிச்சயம் தோல்வி அடைந்து விடுவோம் என்று தெரிந்ததால் தான், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் இருக்கிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வரலாறு காணாத வகையில் ஊழல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கிராம நிர்வாகம் முதல் தலைமை செயலகம் வரை ஊழல் நடைபெறுகிறது. தமிழகம் ஊழலில் திளைத்து இருப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதே சாட்சி. முதல்-அமைச்சர் பதவி விலகி விசாரணை என்ற நெருப்பில் நீந்தி வர வேண்டும்.
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தை பொறுத்தவரை அவர் யாருடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளித்திட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என நம்புகிறேன். மத்திய அரசு புதிதாக கொண்டு வரும் நதிநீர் பாதுகாப்பு மசோதாவிற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்க கூடாது. இந்த மசோதாவால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும்.
மக்களுக்காக அரசு நடத்துவதாக கூறும் ஆட்சியாளர்கள், மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண் விவகாரத்தில் வலைத்தளங்களில் வரும் சர்ச்சைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலகி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் வீட்டின் உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்பவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தாத காரணத்தால்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். தி.மு.க. ஊழல் செய்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அரசு உள்ளது.
பண்டிகை காலம் நெருங்கியுள்ள சூழ்நிலையில் ரேஷன் கடையில் பொருட்கள் இல்லை என கூறப்படுகிறது. இதை அரசு சரிசெய்ய வேண்டும். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ‘மீ டூ’வில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுகாலம் தாழ்ந்த செயல் என கூறுவது தவறானது. பெண்கள் தங்கள் தயக்கம், அச்சம் நீங்கி வெளியே சொல்வதை வரவேற்க வேண்டும். குற்றச்சாட்டு உள்ளானவர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தேவை இல்லாமல் பிரச்சினை செய்து வருகிறார்கள். சேலத்தை சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்துள்ளார். இதனால் 2 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். அரசியல்வாதி, உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story