மாவட்டம் முழுவதும் மழைக்கு 50 வீடுகள் சேதம் : உயிரிழப்பை தவிர்க்க விழிப்புணர்வு


மாவட்டம் முழுவதும் மழைக்கு 50 வீடுகள் சேதம் : உயிரிழப்பை தவிர்க்க விழிப்புணர்வு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 6:59 PM GMT)

மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழைக்கு கடந்த 4 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. உயிரிழப்பை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேனி,

தென்மேற்கு பருவமழைக் காலம் முடிந்து, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மழைக்காலத்தையொட்டி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், மிகஅதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என தனித்தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்தும், தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் மழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வீடுகள் முழுமையாக இடிந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீட்டில் ஒரு பகுதி சேதம் அடைந்து பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், வருவாய்த்துறை மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள் சேதம் அடைந்து இருந்தால் மழை பெய்யும்போது இடிந்து விழ வாய்ப்புகள் உள்ளன. எனவே, மழை பெய்யும்போது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்கிக் கொள்ளுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அப்பகுதியில் பள்ளி, அங்கன்வாடி வளாகங்களில் தங்க வைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், மழை வெள்ளம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கவும், மீட்பு பணியில் ஈடுபடவும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் மாவட்டத்தில் 201 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மீட்பு பணியின்போது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

முதல் பதிலளிப்பவர் என்ற பெயரில் செயல்படும் இந்த தன்னார்வலர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு நாளை (வியாழக்கிழமை) தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. இத்தகவலை வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story