வத்தலக்குண்டுவில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்: 2 போலீசார் பணியிடை நீக்கம்
வத்தலக்குண்டுவில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு விசாரணை கைதி தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
வத்தலக்குண்டு,
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாண்டிக்குடியை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் இளங்கோவன், மங்களம்கொம்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் ஆகியோரின் வீடுகளில் திருட்டு போனது.
இந்த வழக்குகளில் சமீபத்தில் பொன்ராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர், கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக, திண்டுக்கல் சிறையில் இருந்து கொடைக்கானல் கோர்ட்டுக்கு தாண்டிக்குடி போலீசார் நேற்று முன்தினம் அவரை அழைத்து வந்தனர்.
கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பொன்ராஜை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கடற்கரைசெல்வம் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அவரை திண்டுக்கல் சிறையில் அடைப்பதற்காக தாண்டிக்குடி போலீஸ்காரர் பாண்டி, மற்றும் பெண் போலீஸ் சங்கீதா மணி ஆகியோர் கொடைக்கானலில் இருந்து பஸ்சில் அழைத்து வந்தனர்.
மாலை 5½ மணி அளவில் வத்தலக்குண்டு பஸ்நிலையத்துக்கு வந்திறங்கிய அவர்கள் அங்கிருந்து திண்டுக்கல் செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பொன்ராஜ் கூறினார். இதைத்தொடர்ந்து அவருடைய கைவிலங்கை போலீசார் அவிழ்த்து விட்டனர்.
சிறுநீர் கழித்துவிட்டு சிறிதுநேரத்தில் பொன்ராஜ் அங்கு வந்தார். பின்னர் அவர், தனது மனைவியிடம் பேச வேண்டும் என்று போலீசாரிடம் கெஞ்சி கேட்டார். அவர் மீது பரிதாபப்பட்ட போலீஸ் காரர் பாண்டி தனது செல்போனை அவரிடம் கொடுத்தார். மனைவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட பொன்ராஜ் அவரிடம் பேசினார்.
இன்னும் சிறிதுநேரத்தில் வத்தலக்குண்டு பஸ்நிலையத்துக்கு தனது மனைவி வர இருப்பதாகவும், அவரை பார்த்துவிட்டு செல்லலாம் என்றும் பொன்ராஜ் போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இதனால் அவர் மீது இரக்கப்பட்ட போலீசார், பொன்ராஜ் மனைவி வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து பொன்ராஜ் தப்பி ஓடிவிட்டார்.
வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோடு வழியாக ஓடிய பொன்ராஜை போலீசார் விரட்டினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீஸ்காரர் பாண்டி வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை வலைவீசி தேடி வருகிறார். கைதி தப்பி ஓடிய சம்பவத்தால் வத்தலக்குண்டுவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் கேட்டபோது, விசாரணை கைதியை அழைத்து வந்த போலீஸ்காரர் பாண்டி, பெண் போலீஸ் சங்கீதா மணி ஆகியோர் கவனக்குறைவாக இருந்ததற்காக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
Related Tags :
Next Story