ஆனைக்கல்பாளையம் அருகே ரோட்டோரத்தில் மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் சாயக்கழிவு


ஆனைக்கல்பாளையம் அருகே ரோட்டோரத்தில் மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் சாயக்கழிவு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:00 AM IST (Updated: 24 Oct 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ஆனைக்கல்பாளையம் அருகே ரோட்டோரத்தில் மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் சாயக்கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள ஆனைக்கல்பாளையம் பகுதியில் சுற்றுவட்டச்சாலை (ரிங் ரோடு) உள்ளது. ஈரோடு–பூந்துறை ரோட்டில் இருந்து முத்தூர், கரூர், திருச்செங்கோடு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகிறது. இதே பகுதியில் ஈரோடு மாவட்ட போலீஸ் ஆயுதப்படை வளாகமும், போலீசாருக்கான குடியிருப்பு பகுதியும் உள்ளது. ஆனைக்கல்பாளையம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் ஆனைக்கல்பாளையம் ‘ரிங் ரோடு’ ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.

இங்கு ரோட்டோரத்தில் 50–க்கும் மேற்பட்ட மூட்டைகள் குவித்து போடப்பட்டு இருக்கின்றன. அந்த மூட்டைகளில் இருந்து பச்சை நிறத்தில் சாயக்கழிவு கசிந்து வருகின்றது.

தற்போது, அவ்வப்போது மழை பெய்யும்போது மழைநீருடன் கலந்து சாயக்கழிவு அந்த பகுதியில் உள்ள ஓடைகள் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘சில நாட்களுக்கு முன்பு இந்த மூட்டைகளை இங்கு யாரோ போட்டு விட்டு சென்று விட்டனர். அந்த மூட்டைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சாயக்கழிவும் வெளியேறுகிறது. இதுகாற்றில் பரவி இந்த பகுதி மக்கள் சுவாசிக்கும் நிலை உள்ளது. விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருக்கும் சாயக்கழிவு மூட்டைகளை அகற்றவும், அவற்றை இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்றவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கவும் வேண்டும்’ என்றார்.


Next Story