கொடுமணலில் பழமையான அய்யனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு; தொல்லியல் ஆய்வாளர் தகவல்
கொடுமணலில் பழமையான அய்யனார் சிற்பம் மற்றும் நடுகல் ஆகிவை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்டது கொடுமணல். இந்த பகுதி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வாழ்ந்த பகுதியாக தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. கொடுமணல் நொய்யல் ஆற்று நாகரிகம் என்று தொல்லியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு கடந்த 1985–ம் ஆண்டு முதல் பல்வேறு காலக்கட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கொடுமணல் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடந்தது. அப்போது ஏராளமான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் சு.ரவிக்குதார், க.பொன்னுசாமி ஆகியோர் வெங்கமேடு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழமையான ஒரு நடுகல் மற்றும் பழமையான அய்யனார் சிற்பம் ஒன்றினையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் சு.ரவிக்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–
கொடுமணம் என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட கொடுமணல் மிகப்பெரிய வணிக நகராக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்து உள்ளன. தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ள அய்யனார் சிலை சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகும். சங்ககாலம் முதல் இடைக்காலம் வரை வணிகம் செய்த வணிகர்கள் அய்யனாரை காவல் தெய்வமாக வழிபட்டனர். அவர்கள் பயணம் செய்த பெருவழிகளில் அய்யனார் சிலையை அமைத்து வழிபட்டு வந்தனர். இத்தகைய சிற்பம் கொடுமணலில் கிடைத்து இருப்பது கொடுமணலின் வரலாற்றுக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறது. இங்கு கிடைத்து உள்ள பழமையான அய்யனார் சிற்பம் 100 செ.மீட்டர் அகலமும், 120 செ.மீட்டர் உயரமும் கொண்டது. பீடத்தின் மீது அய்யனார் வலது காலை மடித்தும், இடது காலை குத்திட்டும், காலின் மீது இடது கையை வைத்தபடியும், வலது கையில் செண்டு ஆயுதம் ஏந்தியபடியும் உள்ளார். இது மகராஜலீலாசனமாகும். பீடத்தில் 2 பெண்கள் நின்றபடி சாமரம் வீசுவதாகவும், பீடத்தின் கீழ் இடது பக்கமாக ஒரு பெண் நின்றுகொண்டும் இருப்பதாக சிற்பத்தில் உள்ளது. அய்யனாரின் வாகனங்களாக நாயும், பன்றியும் பொறிக்கப்பட்டு உள்ளன.
கொடுமணலில் புலிக்குத்தி வீரநடுகல் கிடைத்து உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. 75 செ.மீட்டர் அகலம், 105 செ.மீட்டர் உயரம் கொண்டது. கல்லில் பொறிக்கப்பட்டு உள்ள வீரனின் தலை இடதுபுறம் சாய்ந்த நிலையில் உள்ளது. வீரன் தனது வாளினால் புலியின் வயிற்றுப்பகுதியை குத்தி, அந்த வாள் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்த நிலையில் உள்ளது. வீரன் இடது கையால் புலியின் வலது முன்னங்காலை பிடித்து உள்ளார். இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்தநிலையில் சிற்பம் உள்ளது. புலியின் இடது முன்னங்கால் அதை கடிக்க வரும் நாயின் மீதும், பின்னங்கால்கள் நிலத்திலும் உள்ளன. நாய் புலியின் வயிற்றுப்பகுதியை கடிக்கும் நிலையில் உள்ளது.
இந்த நடுகல் கொடுமணல் வரலாற்றில் சிறப்பான இடம் பெறக்கூடியவை என்று தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களுமான எ.சுப்பராயலு, கா.ராஜன் ஆகியோர் தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் ரா.பூங்குன்றனார், அய்யனார் சிற்பம் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்றும், நடுகல் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்றும் உறுதி செய்தார்.
இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் சு.ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.