மகளை கொன்று மனைவியுடன் விவசாயி தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்


மகளை கொன்று மனைவியுடன் விவசாயி தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:15 PM GMT (Updated: 23 Oct 2018 7:35 PM GMT)

கடன் தொல்லையால் மகளை கொன்றுவிட்டு விவசாயி தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் மராட்டியத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அகமத்நகர் விவசாயி ஒருவர் மகளை கொன்றுவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இ்துகுறித்த தகவல்கள் வருமாறு:-

அகமத்நகர் மாவட்டம் அகோலே தாலுகாவில் உள்ள சாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங் சேல்கே (வயது31). விவசாயி. இவரது மனைவி சோனாலி(26). இவர்களுக்கு 2 வயதில் சிவான்யா என்ற பெண் குழந்தை இருந்தது. கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது விவசாய நிலத்தில் இருந்த வீட்டில் பாண்டுரங் சேல்கே குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் உறவினர் ஒருவர் சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது வீட்டிற்குள் பாண்டுரங் சேல்கே மனைவி, மகளுடன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், மகளை கொலை செய்துவிட்டு பாண்டுரங் சேல்கேவும் அவரது மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

விவசாயத்திற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் பாண்டுரங் சேல்கே இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story