திருச்செந்தூர் அருகே வீட்டில் இயங்கிய போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: ஆயத்தீர்வை முத்திரை, 2,304 பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
திருச்செந்தூர் அருகே வீட்டில் இயங்கிய போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்த மூலப்பொருட்களுடன், 2 ஆயிரத்து 304 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் அருகே போலி மதுபானம் பதுக்கி வைத்து இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராம் மேற்பார்வையில், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர்கள் இசக்கிமுத்து (தூத்துக்குடி), குமாரவேல் (கோவில்பட்டி) மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அடைக்கலாபுரம் சுனாமிநகரை சேர்ந்த குன்னிமலையான் மகன் செல்லத்துரை (வயது 44) என்பவர் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் அடைக்கலாபுரத்தில் உள்ள அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு, 48 அட்டை பெட்டிகளில், ஒரு பெட்டிக்கு 48 குவாட்டர் பாட்டில்கள் வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 304 போலி மதுபான பாட்டில்கள் இருந்தன. இதில் ஒரு பகுதி பாட்டில்களில் லேபிள் ஒட்டாமலும், மற்றொரு பகுதி பாட்டில்களில் ஹனிடே என்ற லேபிள் ஒட்டி மூடி முத்திரையிடப்பட்ட பாட்டில்களும் இருந்தன.
அதே போன்று 2 கேன்களில் தலா 25 லிட்டர் எரிசாராயம் இருந்தது. ஒரு கேனில் சிவப்பு நிறம் கலக்கப்பட்டு இருந்தது. 16 ஆயத்தீர்வை முத்திரைகள், 195 லேபிள்கள், பாட்டில் மூடிகள், எரிசாராயத்தில் நிறம் கொடுப்பதற்கான ரசாயன கலவை உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தன. உடனடியாக போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் அனைத்து மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். மேலும் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியது தொடர்பாக அடைக்கலாபுரம் சுனாமிநகரை சேர்ந்த பிரேம்குமார், திருச்செந்தூரை சேர்ந்த சந்திரபோஸ், வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த மூர்த்தி, முரளி ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து போலி மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பாராட்டி பரிசு வழங்கினார். அப்போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story