கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசம் பொதுமக்கள் பீதி


கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசம் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 7:39 PM GMT)

கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை தண்ணீர் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் நாய் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு எழுந்த பாண்டியன் வீட்டுக்குள் இருந்தபடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்.

அப்போது வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி வந்த சிறுத்தைப்புலி ஒன்று நாயை கடித்துக் கொன்றது. பின்னர் நாயை வாயில் கவ்வி பிடித்தபடி சிறுத்தைப்புலி மீண்டும் சுற்றுச்சுவரை தாண்டி சென்றது. இதை பார்த்த பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் அரவேனுவில் இருந்து மூணுரோடு செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஷேக்பாய் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த நாயை இரவு நேரத்தில் சிறுத்தைப்புலி கடித்துக்கொன்று எடுத்து சென்றுள்ளது.

மேலும், கடந்த மாதம் அரவேனு பகுதியை சேர்ந்த நெடுஞ்சாலை துறை பொறியாளர் வீட்டிலும் நாயை, சிறுத்தைப்புலி கவ்வி எடுத்துச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அரவேனு சுற்று வட்டார பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

குடியிருப்புக்குள் வரும் சிறுத்தைப்புலிகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன் வனத்துறையினர் சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story