திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை கொசு ஒழிப்பு பணிகள் மும்முரம்


திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை கொசு ஒழிப்பு பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:15 AM IST (Updated: 24 Oct 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருவாரூர்,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த குணா (வயது22), பொன்னிறை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24), குடவாசலை சேர்ந்த அரவிந்த்சாமி (28) ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது நேற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து 3 பேருக்கும் தனியாக இடம் வசதி ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து படுக்கைகளுக்கும் கொசு வலை போடப்பட்டுள்ளது. இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Next Story