டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான வணிக வளாகங்களுக்கு ரூ.37 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான வணிக வளாகங்களுக்கு ரூ.37 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 7:59 PM GMT)

மயிலாடுதுறையில், நகராட்சி ஆணையர் நடவடிக்கையின் பேரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான வணிக வளாகங்களுக்கு ரூ.37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை,

நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் உத்தரவின்பேரில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுரையின்பேரில் மயிலாடுதுறை நகராட்சியில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, நகர்நல அலுவலர் டாக்டர் கிருஷ்ணகுமார், துப்புரவு ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து ஆகியோர் கொண்ட சுகாதார குழுவினர் மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள பஸ் நிலையங்கள், மீன் மார்க்கெட், ஆடு வதை கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் மயிலாடுதுறையில் உள்ள முக்கிய கடைவீதிகளில் இருக்கும் வணிக வளாகங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது 9 வணிக வளாகங்களில் டெங்கு கொசு உற்பத்திக்கு ஏற்ற சூழல் இருந்தது கண்டறியப்பட்டு, அந்த வணிக வளாகங்களுக்கு ரூ.37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் சுகாதார குழுவினர் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு உற்பத்தியாகும் இடமான தண்ணீர் தேங்கக்கூடிய டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வலியுறுத்தினர். மேலும் வீட்டில் உள்ள குப்பைகளை தெருவில் வீசாமல், அதனை சேகரித்து தெருவுக்கு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் கொடுக்க அறிவுறுத்தினர்.

நகராட்சி சார்பில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களின் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட், கோவில் வளாகங்கள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தினமும் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வருகிற 1.1.2019 முதல் தமிழகத்தில் முழுமையாக பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி பகுதியில் வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து ஒத்துழைக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் கூறினார்.

Next Story