18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு எப்படி இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு எப்படி இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 8:07 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என நெல்லையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

நெல்லை, 

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலை வந்தார். அவர், அங்குள்ள படித்துறையில் புனித நீராடினார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாமிரபரணி மகா புஷ்கர விழா சிறப்பாக நடந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள படித்துறைகளில் ஏராளமானவர்கள் புனித நீராடி வருகிறார்கள். நானும் சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் புனித நீராடினேன்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க தி.மு.க. குறுக்கு வழியில் பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகிறது. தி.மு.க.வின் சதியை முறியடித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடந்து வருகிறது.

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த முடியாது என தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூறின. ஆனால் நாங்கள் தேர்தலை 100 சதவீதம் முழுமையாக நடத்தி விட்டோம். இந்த தேர்தலில் 50 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது. அந்த எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் இருக்கிறார்கள். தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும். அதற்கான முழு ஆதரவு எங்களிடம் உள்ளது.

சினிமா துறையில் சில பிரச்சினைகள் இருந்தன. அதை இந்த அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு கொண்டு வந்தது. இந்த ஆண்டு சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறும்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே நடைபெறும். இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கவில்லை. ஆனால், சட்டமன்ற தேர்தலை சந்திக்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஏற்கனவே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தி விட்டோம். 234 தொகுதியிலும் பூத் ஏஜெண்டுகளை நியமிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் பணியை தொடங்குவதிலும் அ.தி.மு.க. முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story