உலக முதலீட்டாளர் மாநாட்டில் வேலூர் மாவட்டத்திற்கு ரூ.1,800 கோடி இலக்கு


உலக முதலீட்டாளர் மாநாட்டில் வேலூர் மாவட்டத்திற்கு ரூ.1,800 கோடி இலக்கு
x
தினத்தந்தி 24 Oct 2018 3:45 AM IST (Updated: 24 Oct 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

உலக முதலீட்டாளர் மாநாட்டில் வேலூர் மாவட்டத்திற்கு ரூ.1,800 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் பேசினார்.

ஆம்பூர்,

தமிழக அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாவட்டந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் ஆரம்பகட்ட விழிப்புணர்வு கூட்டம் ஆம்பூரில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் மணிவண்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:- உலக முதலீட்டாளர் மாநாட்டையொட்டி முதலீட்டை ஈர்க்க வேலூர் மாவட்டத்திற்கு ரூ.1,800 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள தொழில் முனைவோருடன் தமிழக அரசு சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதற்காக தொழில் முனைவோருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடனுதவி, பிற துறைகளின் தடையில்லா சான்று, வரைபட ஒப்புதல் ஆகியவை ஒருமுறை தீர்வுக்குழுவின் மூலம் ஒற்றை சாளர அனுமதி பெற்று தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் 72 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 81 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 94 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 288 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு மாற்று பொருட்களை உருவாக்கும் தொழிலை தொடங்கினால் வருவாய் ஈட்டுவதற்கும், வேலை வாய்ப்புக்கும் நல்ல சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மணிவண்ணன் பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்திற்கான முதலீடு ரூ.1,800 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.3 ஆயிரம் கோடிக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் 2 ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால் தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி.முருகேசன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் கிருபா, வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் வசந்தகுமார், வங்கி அதிகாரிகள், தொழில்முனைவோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் பி.எஸ்.அசோகன் நன்றி கூறினார்.

Next Story