செஞ்சி அருகே, ஜெயின் கோவிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த 5 பேர் கைது


செஞ்சி அருகே, ஜெயின் கோவிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 9:30 PM GMT (Updated: 23 Oct 2018 9:15 PM GMT)

செஞ்சி அருகே ஜெயின் கோவிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரும்புகை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மல்லிநாதர் ஜினாலயம் என்ற ஜெயின் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 2 மல்லிநாதர் சிலைகள், 2 பார்சுவநாதர் சிலைகள், ஜோலாமாலினி, தரனேந்திரர், பத்மாவதி, விளக்கு ஏந்திய பெண் சிலை ஆகிய 8 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச்சென்று விட்டனர். இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிலைகளை கொள்ளையடித்த நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவராஜ் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 11-ந் தேதி செஞ்சி அருகே அப்பம்பட்டு காப்புக்காடு பகுதியில் இருந்து 4 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அந்த 4 சிலைகளும் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் கொள்ளைபோன சிலைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மற்ற 4 சிலைகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் மீதமுள்ள அந்த 4 சிலைகளும் நேற்று காலை செஞ்சி அருகே காரை காப்புக்காடு பகுதியில் உள்ள குட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை கொள்ளையடித்த நபர்களுக்கு அந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனவைதானா, அல்லது வேறு ஏதேனும் உலோகத்தினால் ஆனதா? என்று கண்டறிய முடியாமலும், அவற்றை வெளியில் விலைபேசி விற்க முடியாமலும் போனதால் காப்புக்காடு பகுதியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரமாக முடுக்கிவிட்டனர். இதில் செஞ்சி கண்ணகி நகரை சேர்ந்த பாபு மகனான நகை வேலை பார்த்து வரும் மேகநாதன் (வயது 35) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை செய்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

மல்லிநாதர் ஜெயின் கோவிலில் பழமைவாய்ந்த சிலைகள் இருப்பதும், அவை தங்கத்தினால் ஆனவைகளாக இருக்கக்கூடும் என்றும் இந்த சிலைகளை கொள்ளையடித்து விற்றால் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்றும் மேகநாதன், தனது நண்பரான செஞ்சி அருகே உள்ள சிட்டாம்பூண்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் (35) என்பவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

அதோடு சுரேஷ் தனது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் ராஜசேகர் (27), இஸ்மாயில் மகன் அலிபாஷா என்கிற சவுக்கத்அலி (24), மேல்களவாய் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்தானகிருஷ்ணன் (32) ஆகியோரின் உதவியையும் நாடினார்.

இவர்கள் 5 பேரும் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்து சம்பவத்தன்று நள்ளிரவில் மல்லிநாதர் ஜெயின் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 8 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் இந்த சிலைகளின் தன்மை, மதிப்பை அறிய முடியாமல் போனதாலும், அதனை விலை பேசி விற்க முடியாததாலும் அவர்கள் 5 பேரும் செஞ்சி அடுத்த அப்பம்பட்டில் உள்ள காப்புக்காட்டில் 4 சிலைகளையும், செஞ்சி அடுத்த காரை காப்புக்காட்டில் உள்ள குட்டையில் 4 சிலைகளையும் போட்டுவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மேகநாதனை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பர்களான சுரேஷ், சந்தானகிருஷ்ணன், ராஜசேகர், அலிபாஷா ஆகியோரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.பின்னர் 5 பேரையும் செஞ்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கைதான 5 பேருக்கும், தமிழகத்தின் வேறு ஏதாவது பகுதியில் சாமி சிலைகளை திருடிய வழக்கில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Next Story