மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய தீவிர சோதனை - 942 வழக்குகள் பதிவு; 191 பேர் கைது


மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய தீவிர சோதனை - 942 வழக்குகள் பதிவு; 191 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 10:15 PM GMT (Updated: 23 Oct 2018 9:18 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விடிய, விடிய தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது 942 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 191 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீசார் ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் சென்ற வாகனங்களை நிறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தீவிர சோதனை செய்தார்.

இதேபோல் தங்கும் விடுதிகளில் யாரேனும் சந்தேகப்படும்படியாக தங்கியுள்ளனரா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அதுமட்டுமின்றி குற்றம் அதிகம் நடைபெறும் இடங்களாக கருதப்படும் இடங்களில் பழைய குற்றவாளிகளின் நடமாட்டம், ரவுடிகளின் நடமாட்டம் குறித்தும் மற்றும் வங்கிகள், நகை கடைகள் இருக்கும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவையும் கடந்து நேற்று காலை 5 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது. இந்த சோதனையின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகம் இல்லாமல் வாகனங்களை இயக்குதல் மற்றும் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தவர்கள், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், லாட்டரி சீட்டு விற்றவர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள் என மொத்தம் 942 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 19 பேரையும் மற்றும் பழைய குற்றவாளிகள், லாட்டரி சீட்டு விற்றவர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என 167 பேரையும், நீதிமன்றத்தினால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 பேர் என மொத்தம் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story