கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து அம்மா சாலை அமைக்கும் பணி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு


கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து அம்மா சாலை அமைக்கும் பணி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:30 AM IST (Updated: 24 Oct 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான அம்மா சாலை அமைக்கும் பணிகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர்,

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரெயில் நிலையம் முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை அம்மா சாலை என்கிற பெயரில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டன. இதற்காக போதுமான நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த சாலை அமைக்க ரூ.21 கோடியே 12 லட்சம் முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கரூர் வெங்கமேடு ரெயில்வே பாலம் அருகே இருந்து குறிப்பிட்ட தூரம் வரை செம்மண் கொட்டப்பட்டு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சில காரணங்களால் அந்த சாலை அமைக்கும் பணியினை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாமல் போனது. 40 அடி அகலத்தில் வடிகால், தெரு விளக்குகள் வசதிகளுடன் அம்மா சாலை அமைக்கப்பட்டால் கரூர் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் வந்து செல்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் அந்த சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அம்மா சாலை அமைக்கும் வரை படத்துடன் நேற்று கரூர் ரெயில் நிலையத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தாசில்தார் ஈஸ்வரன் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், ரெயில் நிலைய அதிகரி சுரேந்திரபாபு ஆகியோர் வந்தனர். பின்னர் அந்த வரைபடம் மூலம் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தில் உள்ள தனியார் நிலங்களின் அளவு எவ்வளவு?, எத்தனை மரங்கள் உள்ளன?, விளைநிலங்கள் உள்ளனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும் ரெயில்வே தண்டவாளத்தையொட்டி அந்த சாலை அமைக்கும் பணிகள் நடப்பதால் தடுப்புச்சுவர் எங்கெங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்தும் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் சாலை அமைக்கப்படவுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சென்றனர். 

Next Story