‘சபரிமலையை காப்போம்’ என்ற கோஷத்துடன் பா.ஜனதா மகளிர் அணியினர் ஊர்வலம்


‘சபரிமலையை காப்போம்’ என்ற கோஷத்துடன் பா.ஜனதா மகளிர் அணியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 9:44 PM GMT)

‘சபரிமலையை காப்போம்’ என்ற கோஷத்துடன் திருச்சியில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களும் வழிபடலாம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு சபரிமலை பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதி இல்லை என்பதில் தேவசம்போர்டு கண்டிப்புடன் இருந்து வருகிறது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய கேரள கம்யூனிஸ்டு அரசு மறுத்து வருவதை கண்டித்தும், சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க பெண்கள் கோவிலுக்கு செல்லமாட்டோம் என்பதை தெரிவிக்கும் வகையிலும் திருச்சி மாவட்ட பா.ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் நேற்று, ‘சபரிமலையை காப்போம்’ என்ற கோஷத்துடன் ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலத்தை திருச்சி கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவில் முன்பிருந்து பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவி சுசிலா தலைமை தாங்கினார். மகளிர் அணி கோட்ட பொறுப்பாளர் பார்வதி நடராஜன் மற்றும் உமாதேவி, சித்திரை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யா, கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், இணை பொறுப்பாளர் கண்ணன் மற்றும் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

ஊர்வலம் அய்யப்பன் கோவிலில் இருந்து தொடங்கி எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா, கோர்ட்டு, கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் வழியாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தின்போது மகளிர் அணியினர் ‘புனித புராணம் காப்போம், சபரிமலை பாரம்பரியத்தை காப்போம்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.

முன்னதாக பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,“சபரிமலையில் அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வரும் பாரம்பரியத்துக்கு எதிரானதாகும். மத வழிபாடுகளில் பாரம்பரியத்துக்கு மாறாக கோர்ட்டு தலையிடுவதை ஏற்க முடியாது. ‘நாங்கள் சபரிமலைக்கு செல்வோம்’- என தாய்மார்கள் யாரும் கோர்ட்டை அணுகவில்லை. மாறாக மதத்தை புண்படுத்தும் நோக்கத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வழக்கு போட்டதை ஏற்று இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. இஸ்லாமியருக்கும் இந்து கோவிலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இந்த பின்னணியில் முஸ்லிம், கம்யூனிஸ்டு மற்றும் கிறிஸ்தவம் உள்ளது. அய்யப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பத்மபூரணி என்ற 10 வயது சிறுமி, நான் இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன் என்ற வாசகத்துடன் சென்று திரும்பி இருக்கிறார். அச்சிறுமி இன்னும் 41 ஆண்டுகள் காத்திருக்க தயாராக உள்ளாள். சபரிமலை ஏழை-பணக்காரன் என்ற பாகுபாட்டை தாண்டி நிற்கிறது. கோவிலுக்கு செல்லும் எல்லோரும் சமம்தான். ஒழுக்கத்தை போற்றும் வழிபாட்டு முறை இந்த தீர்ப்பால் மாற்றப்படக்கூடாது. நல்ல எண்ணங்களை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்பதுதான் சிலரின் நோக்கமாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்திட வேண்டும்” என்றார்.

Next Story