நாமக்கல் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி கலெக்டர் ஆய்வு


நாமக்கல் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 9:56 PM GMT)

நாமக்கல் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

மழைக்காலங்களில் நீரானது வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவற்றில் தேங்குவதாலும், வீடுகளில் குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்காமல் இருப்பதாலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

எனவே டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டைபுதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப் புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என நேரில் பார்வையிட்டார்.

மக்கும் குப்பை

பின்னர் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் மேற்கொள்ளப்பட உள்ள, டெங்கு ஆய்வு குறித்த வருடாந்திர காலண்டரை கலெக்டர், வீடுகளில் ஒட்டினார். மேலும் குடியிருப்புகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வாங்கப்படும் பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்விக்கரசன் உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story