தாரமங்கலத்தில், வரவேற்பு கொடி கட்டியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


தாரமங்கலத்தில், வரவேற்பு கொடி கட்டியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:38 PM GMT (Updated: 23 Oct 2018 10:38 PM GMT)

தாரமங்கலத்தில், வரவேற்பு கொடி கட்டியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ந் தேதி சேலத்திற்கு வந்தார். பின்னர் தாரமங்கலம் வழியாக எடப்பாடிக்கு சென்றார். முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக அன்று அதிகாலை தாரமங்கலம் பாட்டன் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ராஜவேல் (வயது 27), மணிகண்டன் (24) ஆகிய 2 பேரும் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் அ.தி.மு.க. கொடி மற்றும் வரவேற்பு பேனர்கள் கட்டிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மின்கம்பியில் இருந்து ராஜவேல் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்து ராஜவேல், சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் கூடி ராஜவேல் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் ராஜவேல் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மதியம் 1.30 மணி அளவில் திடீரென்று அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்

இதைத்தொடர்ந்து சேலம் டவுன் தாசில்தார் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கட்சி கொடி கட்டியபோது ராஜவேல் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேலை சம்பந்தப்பட்ட கட்சியினர் யாரும் வந்து பார்த்து ஆறுதல் கூறவில்லை. அவர்கள் வந்து நேரில் பார்த்து டாக்டர்களிடம் உயர் சிகிச்சை அளிக்க கோரி அறிவுறுத்தி இருந்தால், ராஜவேல் இறந்து இருக்க மாட்டார். எனவே இறந்துபோன ராஜவேல் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறினர்.

அப்போது தாசில்தார் மற்றும் போலீசார் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மதியம் 3 மணி அளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று மதியம் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.


Next Story