பண்ருட்டி அருகே: துர்நாற்றத்துடன் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பரபரப்பு - குழாயில் காகம் அழுகி இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி


பண்ருட்டி அருகே: துர்நாற்றத்துடன் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பரபரப்பு - குழாயில் காகம் அழுகி இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 23 Oct 2018 9:45 PM GMT (Updated: 23 Oct 2018 11:31 PM GMT)

பண்ருட்டி அருகே துர்நாற்றத்துடன் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குழாயை கழற்றி பார்த்தபோது காகம் அழுகி இருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கிராமம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

அதன் அருகிலேயே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, ஒவ்வொரு தெருவிற்கும் தொட்டியில் இருந்து தனித்தனி குழாய்கள் மூலம் கிராமம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக நடுத்தெரு மக்களுக்கு துர்நாற்றத்துடன் குடிநீர் வந்தது. மேலும் அதில் புழுக்களும் இருந்தன. நேற்று காலையில் அந்த தெரு முழுவதும் குடிநீர் வரவில்லை.

இது பற்றி ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த தெருவை சேர்ந்த இளைஞர்கள் சிலர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது தொட்டி முழுவதும் துர்நாற்றம் வீசியது. உடனே நடுத்தெருவிற்கு செல்லும் குடிநீர் குழாயை கழற்றி பார்த்தனர். அதில் காகம் ஒன்று இறந்து அழுகிய நிலையில் இருந்தது. குழாய் முழுவதும் புழுக்களாக காணப்பட்டது. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அழுகிய நிலையில் இருந்த காகத்தை எடுத்து, வெளியே போட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி ‘வாட்ஸ்-அப்’பில் வைரலாக பரவுகிறது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரியாக பராமரிப்பதும் இல்லை. கழுவுவதும் இல்லை. தொட்டியின் மேல் பகுதியில் உள்ள மூடி திறந்து கிடந்துள்ளது. இதனால் அந்த காகம் உள்ளே விழுந்து இறந்திருக்கலாம். குடிநீர் வினியோகம் செய்யும்போது, அந்த காகம் குழாயில் சிக்கி தண்ணீர் வராமல் அடைபட்டுள்ளது. வரும் காலங்களில் ஊராட்சி நிர்வாகத்தை நம்பி இருக்கப்போவதில்லை. ‘தன் கையே தனக்கு உதவி’ என்ற பழமொழிக்கு ஏற்ப இனி, மாதந்தோறும் இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய இளைஞர்கள் கொண்ட குழுவை உருவாக்க உள்ளோம் என்றனர். 

Next Story