கடலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதி: 3 பேருக்கு டெங்கு அறிகுறி


கடலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதி: 3 பேருக்கு டெங்கு அறிகுறி
x
தினத்தந்தி 24 Oct 2018 3:00 AM IST (Updated: 24 Oct 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 பேர், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. மேலும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சிகிச்சை பெறுவதற்காக வந்தனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. குழந்தைகள் நல பிரிவிலும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

மேலும் புறநோயாளிகள் பிரிவில் வந்த சில நோயாளிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவர்கள் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பிரிவில் 67 பேர் அனுமதிக்கப்பட்டனர். உள்நோயாளிகள் வருகை அதிகரிப்பால் வார்டுகள் நிரம்பி வழிகின்றன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 67 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இவர்களில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தை சேர்ந்த கருணாகரன்(வயது 25), கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்த சிவப்பிரகாசம்(25), விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுபாஷ்(26) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 67 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகள், வட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 133 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். 

Next Story