சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு


சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 11:00 PM GMT (Updated: 24 Oct 2018 2:49 PM GMT)

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரளாவை போன்று தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலை நடை திறக்கப்பட்ட போது கோவிலுக்கு சென்ற பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், சபரிமலையில் பெண்களை  அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கன்னியாகுமரியில் நேற்று வியாபாரிகள் கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், பகவதி அம்மன் சிறு வியாபாரிகள் நல சங்கம், பார்க் வியூ பஜார் வியாபாரிகள் சங்கம், விவேகானந்தா சிறுகடை வியாபாரிகள் சங்கம், தமிழன்னை வியாபாரிகள் சங்கம், கடற்கரை சாலை வியாபாரிகள் சங்கம், நட்சத்திர வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதனால், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு, ரதவீதி, பார்க் வியூ பஜார், கடற்கரை சாலை, திருவேணி சங்கமம் போன்ற  பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வியாபாரிகளின் போராட்டம் காரணமாக கன்னியாகுமரிக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

Next Story