அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ உண்மைக்கு புறம்பானது தளவாய்சுந்தரம் பேட்டி


அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ உண்மைக்கு புறம்பானது தளவாய்சுந்தரம் பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2018 4:30 AM IST (Updated: 24 Oct 2018 9:23 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ உண்மைக்கு புறம்பானது என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவைத்தலைவர் சுதர்சனனை மத்திய கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சியினரும் ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. எனவே அதுபற்றி எதுவும் கூற இயலாது. கோர்ட்டு தீர்ப்பு வந்தாலும் அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ உண்மைக்கு புறம்பானது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைச்சர் ஜெயக்குமார் மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் புதிதாக 2 தாலுகா உருவாக்கும் பணிகளும், நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அ.தி.மு.க.வில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது குமரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண்தங்கம் (மேற்கு) உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story