தனித்தனி விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் சாவு
தனித்தனி விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மயிலம்,
மயிலம் அருகே உள்ள கொடிமா கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 25), கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் கூட்டேரிப்பட்டு கூட்டு ரோட்டுக்கு புறப்பட்டார். மயிலம் ரெயில்வே மேம்பாலத்தின் இறக்கத்தில் சென்றபோது, அய்யனாரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் ஓரம் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அய்யனாரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேல்மலையனூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாமணி(70), விவசாயி. இவர் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வளத்திக்கு புறப்பட்டார். தேவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், கண்ணாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் கண்ணாமணி பலத்த காயமடைந்தார். எதிரே வந்த மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்தவர் காயமின்றி உயிர் தப்பினார். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் கண்ணாமணியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story