ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை
நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜூ.
இவர், கல்லுரி வளர்ச்சி குழு தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர் சங்கம் சார்பில் ஒரு செல்போன் உரையாடல் அடங்கி ஆடியோ சி.டி. மற்றும் புகார் மனு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் பதிவாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட முக்கிய துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து துணைவேந்தர் பாஸ்கர் உத்தரவின்பேரில் இந்த புகார் குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் பேராசிரியர் கோவிந்தராஜூ மற்றும் அந்த ஆராய்ச்சி மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்கலைக்கழக தகவல் தொடர்பியல் துறையை சேர்ந்த பேராசிரியர் கோவிந்தராஜூ மீது கடந்த 17-ந் தேதி நெல்லை மாணவர் சங்கம் சார்பில் புகார் கூறப்பட்டது அவர்கள் ஒரு சி.டி.யும், புகார் மனுவும் தபால் மூலம் அனுப்பி இருந்தார்கள். அதில் பேராசிரியர் கோவிந்தராஜூ ஒரு ஆராய்ச்சி மாணவியை பாலியல் ரீதியாக அவதூறாக பேசிய உரையாடல் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. முழு விசாரணைக்கு பிறகு நடந்தது என்ன? என்பது தெரியவரும். அவர் தவறு செய்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பேராசிரியர் கோவிந்தராஜூ மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அந்த ஆராய்ச்சி மாணவியும் விடுமுறையில் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story