பர்கூர் மலைப்பகுதியில் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட வாலிபர் கைது - உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியும் பறிமுதல்
பர்கூர் மலைப்பகுதியில் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட ஒந்தனை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருப்பதாக பர்கூர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டார்கள். அப்போது மாதையன் என்பவரது மகன் புட்டுமாதன் (வயது 25) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் ராகி பயிரிடப்பட்டு இருந்ததும், அந்த பயிருக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார், கஞ்சா செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். மேலும் புட்டுமாதன் வீட்டில் போலீசார் கஞ்சா உள்ளதா? என்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட புட்டுமாதனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story