பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய கோவை அரசு கலைக்கல்லூரி மாணவி இடைநீக்கம் ரத்து


பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய கோவை அரசு கலைக்கல்லூரி மாணவி இடைநீக்கம் ரத்து
x
தினத்தந்தி 25 Oct 2018 12:00 AM GMT (Updated: 24 Oct 2018 7:04 PM GMT)

பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய கோவை அரசு கலைக்கல்லூரி மாணவி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அவர் படிப்பை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை,

 கோவையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் எவ்வித அனுமதியும் இல்லாமல் மாணவ–மாணவிகள் கடந்த 28–ந் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். இதற்கு அங்கு எம்.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஏ.மாலதி தலைமை தாங்கி விழாவை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 1–ந் தேதி மாணவி ஏ.மாலதியை இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் சித்ரா உத்தரவிட்டார்.

இதற்கான கடிதம் மாணவி ஏ.மாலதியின் வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவியிடம் கடந்த 22–ந் தேதி வரலாற்றுத்துறை தலைவர் செந்தூர் பாண்டியன் தலைமையில் 4 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அனுமதி இல்லாமல் விழா நடத்தியது குறித்து விளக்க கடிதம் மாணவியிடம் பெறப்பட்டது. பின்னர் அந்த விசாரணை அறிக்கை மற்றும் மாணவியின் கடிதம் ஆகியவை கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று கல்லூரி ஆட்சிக்குழு கூட்டம் முதல்வர் கே.சித்ரா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவி ஏ.மாலதி அனுமதி பெறாமல் விழா நடத்தியதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தால் அவரின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அந்த இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவருக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அந்த மாணவி எதிர்வரும் காலங்களில் கல்லூரியின் சட்டத்திட்டத்தின் படி நடந்துகொள்வேன் என்று கடிதம் மூலம் எழுதி கொடுத்து உறுதியளிக்க வேண்டும். இதுதொடர்பாக அந்த மாணவிக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட உள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story