சிறுபான்மையினர் நலனுக்கான பிரதமரின் 15 அம்ச திட்டம் தொய்வின்றி செயல்படுத்த கலெக்டர் உத்தரவு


சிறுபான்மையினர் நலனுக்கான பிரதமரின் 15 அம்ச திட்டம் தொய்வின்றி செயல்படுத்த கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலனுக்கான பிரதமரின் 15 அம்ச திட்டங்களை, தொய்வின்றி செயல் படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலனுக் காக செயல்படுத்தப்படும் பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திட்டக்குழு அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சிறுபான்மையினரின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பயன்கள், பள்ளிக்கல்வி மேம்படுத்துதல், உருது கல்வி மேம்படுத்துதல், மதரசா கல்வியை நவீனப் படுத்துதல், கல்வி உதவித்தொகை, மவுலானா ஆசாத் கல்வி மூலம் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல், சுய தொழில் மற்றும் ஏழைகளின் கூலி தொழில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தொழில்நுட்ப பயிற்சி மூலம் திறமையை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள், மத்திய- மாநில அரசு பணியில் சேர்த்தல், ஊரக வீட்டு வசதி திட்டம், குடிசை பகுதிகளில் வசதிகளை மேம்படுத்துதல், இன கலவர வழக்குகளில் நடவடிக்கை எடுத்தல், இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதமரின் 15 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்ட செயல் பாடுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்ள அலுவலர்களும், திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களும் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் கங்காதேவி மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கான 15 அம்ச திட்டக்குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story