போராட்டம் நடத்தி மூடிய டாஸ்மாக் கடையை திறக்க கோரி மறியல்


போராட்டம் நடத்தி மூடிய டாஸ்மாக் கடையை திறக்க கோரி மறியல்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக் கோரி மற்றொரு தரப்பினர் மறியல் செய்தனர். இதில் பெண்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தில் இருந்து முதுகுடி செல்லும் சாலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையால் மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாக கூறி சில நாட்களுக்கு முன்பாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொது மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் மூடப்பட்ட கடையை மீண்டும் திறக்கக் கோரி அதே கிராமத்தில் உள்ள, மற்றொரு தரப்பை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்றம் எதிரே, முதுகுடி சாலையில் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்களும் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு உருவானது.

இந்த கடை மூடப்பட்டதால், ஆண்கள் வெளியூருக்கு சென்று மது அருந்தும் நிலை உள்ளது. மது அருந்தி விட்டு இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்துகளில் சிக்குகின்றனர். குடித்து விட்டு வாகனத்தை ஓட்டும் போது காவல் துறையினரிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தும் நிலை உள்ளது. மேலும் கூலி வேலை செய்யும் நபர்கள் விபத்தில் சிக்கினால், வீட்டில் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.

போராட்டம் நடத்தியவர்களிடம் கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை வழக்கம் போல செயல்படும் என்ற அதிகாரிகளின் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.


Next Story