கோரிக்கைகளை வலியுறுத்தி நீர்த்தேக்க தொட்டி- மின்மோட்டார் இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு


கோரிக்கைகளை வலியுறுத்தி நீர்த்தேக்க தொட்டி- மின்மோட்டார் இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-மின்மோட்டார் இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்கமான பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாபு மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அதில், தமிழ்நாடு அரசு 7-வது ஊதியக்குழுவில் அறிவித்த ஊதியத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் பெரம்பலூரில் ஊராட்சியில் பணிபுரியும் நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங் கப்பட்டு வருகிறது. ஆனால் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் 7-வது ஊதியக்குழுவில் அரசு அறிவித்த ஊதியம், நிலுவை தொகை பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

2 நீர்த்தேக்க தொட்டிகளை இயக்குபவர்களுக்கு கூடுதல் ஊதியம் அரசு வழங்க வேண்டும். நீர்த்தேக்க தொட்டியை மாத 2 முறை சுத்தம் செய்வதற்கான படியை, அந்தந்த மாதத்தின் ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்க வருடத்திற்கு 2 சீருடை மற்றும் காலணி வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த கோரிக்கைகளை தீபாவளிக்கு முன் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தரவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என்று சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

Next Story