தீபாவளியை முன்னிட்டு கரூர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்


தீபாவளியை முன்னிட்டு கரூர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நொய்யல்,

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் பிரதானமாக இருக்கும். இதற்காக வெல்லம் தயாரிக்கும் பணி கரூர் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300-க்கு விற்பனை செய்கின்றனர்.

கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை நவீன எந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதத்துடன் பாகு வந்தவுடன், மர அச்சுத் தொட்டியில் ஊற்றி உலர வைத்து குப்புற கவிழ்த்து மர சுத்தியலால் தட்டுகின்றனர். அதிலிருந்து அச்சு வெல்லம் விழுகிறது.

அதேபோல மரத்தொட்டியில் கரும்பு பாகை ஊற்றி உலர வைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் நன்கு உலர வைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கப்படுகிறது. தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் இந்த பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் ரூ.1200-க்கும் வாங்கிச் செல்கின்றனர். வெல்லத்துக்கு ஓரளவு விலை கிடைப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story