தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 152 பேர் கைது


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 152 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 128 பெண்கள் உள்பட 152 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். மேலும் அங்கு வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் காலை 10 மணிக்கு போராட்டம் நடத்துவதற்காக சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட தலைவர் உமா தலைமையில் துணைத்தலைவர்கள் ரெங்கசாமி, குணசேகரன், மதியழகன், சாந்தி ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அரசு உழியர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராசு தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்தின் கலந்து கொண்டு பேசினார்.


சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கான உணவூட்ட செலவின தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, நிலஅளவை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் கோதண்டபாணி, வட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சோமநாதராவ் நன்றி கூறினார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 128 பெண்கள் உள்பட 152 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story