18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வழக்கில் அ.தி.மு.க. துரோகிகளுக்கு தகுந்த தண்டனை - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வழக்கில் அ.தி.மு.க. துரோகிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
அம்மாபேட்டை,
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அந்த எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்தநிலையில் சபாநாயகர் தனபாலின் தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சித்தார், செம்படாம்பாளையம் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைந்தபிறகு சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை 2–ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார்கள். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை. மேலும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் ஐகோர்ட்டு தகுந்த தீர்ப்பு கூறியுள்ளது.
இதனால் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்யதவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைத்து உள்ளது. வருகிற காலங்களில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்துவார். மேலும், கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்வது குறித்து முதல்–அமைச்சர் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.