18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 5:13 PM GMT)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தஞ்சாவூர்,

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது செல்லும் என கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினரும் தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


தஞ்சை ரெயிலடியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டை பகுதி அ.தி.மு.க. செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் சரவணன், கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story