திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் பலத்த மழை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் பலத்த மழை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 26 Oct 2018 3:15 AM IST (Updated: 25 Oct 2018 11:28 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆறுமுகநேரி பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

திருச்செந்தூர்,
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இரவு முழுவதும் விடிய விடிய பெய்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. ஆறுமுகநேரி-மூலக்கரை ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அங்குள்ள தரைமட்ட கிணறும் நிரம்பியது. அதில் ஆபத்தை உணராமல், சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் நிலத்தை உழுது, அடுத்தகட்ட விவசாய பணிகளை தொடங்கினர். பலத்த மழை காரணமாக குலசேகரன்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது.

Next Story