தூத்துக்குடியில் பலத்த மழை பள்ளிகளுக்கு விடுமுறை-உப்பளங்கள் மூழ்கின


தூத்துக்குடியில் பலத்த மழை பள்ளிகளுக்கு விடுமுறை-உப்பளங்கள் மூழ்கின
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 6:06 PM GMT)

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை வரை விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

தூத்துக்குடியில் கதிர்வேல்நகர், டபிள்யூ.ஜி.சி. ரோடு, தெற்கு ராஜா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, சின்னக்கோவில் வளாகம், சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் மழைநீரில் மிதந்தபடி சென்றன.

இந்த மழையால் மாவட்டத்தில் 2 வீடுகள் பகுதியாகவும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்தன. தூத்துக்குடி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து உப்பளங்களும் மழைநீரில் மூழ்கின. இதனால் உப்பள தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

விடிய, விடிய கொட்டிய மழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போன்று சென்னை-தூத்துக்குடி இடையே நேற்று காலையில் இயக்கப்படக்கூடிய தனியார் விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

பலத்த மழை காரணமாக தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் நேற்று காலையில் ரெயில்கள் மெதுவாக ரெயில் நிலையத்துக்குள் ஊர்ந்து வந்தன. அங்கு ரெயில் பராமரிப்பு பகுதியிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்புக்காக நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் வழக்கமாக இரவு 8 மணிக்கு புறப்படக்கூடிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக இரவு 9-30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 98.4 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 84 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 57 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் -84, குலசேகரன்பட்டினம் -50, காயல்பட்டினம் -98.4, விளாத்திகுளம் -12, வைப்பார் -39, கயத்தாறு -16, கடம்பூர் -11, ஓட்டப்பிடாரம் -57, மணியாச்சி -10, வேடநத்தம் -20, கீழஅரசடி -9, எட்டயபுரம் -4, சாத்தான்குளம் -40, ஸ்ரீவைகுண்டம் -25, தூத்துக்குடி -55.8.


Next Story