மனைவியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர்,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்சங்கர்(வயது 25). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி(24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் காதலித்து வந்த இவர்கள், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெருமாநல்லூர் வாஷிங்டன் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஒருசில வாரங்களிலேயே ராம்சங்கர் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் சுந்தரிக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராம்சங்கரிடம் சுந்தரி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் 15–ந்தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சுந்தரி மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராம்சங்கர், அருகில் இருந்த தீப்பெட்டியை எடுத்து சுந்தரியின் உடலில் தீயை பற்ற வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுந்தரியின் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுந்தரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராம்சங்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி அல்லி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ராம்சங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராம்சங்கரை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.