திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்,
சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் பாக்கியம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசினார்.
மேலும், இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் முருகதாஸ், ஜாக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
இந்நிலையில் நேற்று காலையில் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தங்கியிருந்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.