கீழ் பாலத்தை விரிவுபடுத்தக்கோரி ரெயில் பாதையில் கிராம மக்கள் 2-வது நாளாக தர்ணா


கீழ் பாலத்தை விரிவுபடுத்தக்கோரி ரெயில் பாதையில் கிராம மக்கள் 2-வது நாளாக தர்ணா
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 6:56 PM GMT)

கீழ் பாலத்தை விரிவுபடுத்தக்கோரி ரெயில் பாதையில் அமர்ந்து கிராம மக்கள் நேற்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி இடையேயான பணிகள் முடிவடைந்து விட்டன. திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் தண்டவாளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கிராமத்தில் இருந்து ஓவர்குடி செல்லும் சாலையின் குறுக்கே ரெயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கீழ் பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்து வந்தனர். கீழ் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் நேற்றுமுன்தினம் நெடும்பலத்தில் உள்ள ரெயில் பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் அங்கு தண்டவாளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து கீழ் பாலத்தை விரிவுபடுத்தும் பணிகளை உடனடியாக தொடங்கக்கோரி நேற்று கிராம மக்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, உலகநாதன், தேசிய கட்டுபாட்டுக்குழு உறுப்பினர் வையாபுரி, நெடும்பலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் அம்பிகாபதி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே துறையின் தலைமை பொறியாளர் ஜான்சன்விஜயகுமார், துணை பொறியாளர்கள் புஷ்பராஜ், அருணாசலம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகள், கதிர் அடிக்கும் எந்திரங்கள், பள்ளி வாகனங்கள் செல்லும் வகையில் கீழ் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், ரெயில் பாதையில் ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் தற்காலிக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

Next Story